Wednesday, May 15, 2013






நீயும் நானும்
நடந்து செல்லும் இந்த ஒற்றையடி 
பாதையில் வேறென்ன வேண்டும் 
மழையும் ஒரு குடையும் 
தவிர...

Wednesday, May 8, 2013

இறுதியாக ஒரு தாலாட்டு


மலராக இருந்து இரும்பாக மாறிவிட்ட தன் மகனுக்காக ஒரு தாய் இறுதியாக  கண்ணீர் விட்டு பாடும்  தாலாட்டு:  இறுதியாக ஒரு தாலாட்டு 






கண்ணே கரும்பழகா..!
கருப்பட்டி முத்தழகா..!
கைவந்த ரோசாவே..!
நான் பெத்த ராசாவே..!

உன் ஆத்தா மனசுக்குள்ள 
ஓராயிரம் கனவுகளடா 
கனவுக்கு பஞ்சமில்ல 
தீர்த்து வைப்பார் யாரடா..!

பள்ளிக்கூடம் போகையிலே-நீ
பாடம் படிக்கையிலே 
பார்த்து பார்த்து நான் ரசித்தேன் 
பதமாத்தான் உனை வளர்த்தேன்..!

வெறுங்காலில் நீ நடந்தா-அது 
வெலங்காம போயிடுமினு
என்னிடுப்பில் தூக்கி வச்சு 
எறக்காமல் நான் நடந்தேன்...! 

கட்டாந்தரையில் நீ படுத்தா 
கட்டெறும்பு கடிக்குமினு 
தோல் மேல தூக்கி வச்சு 
தாலாட்டு பாடி வந்தேன்..!

கலவி செய்த உன்னப்பன் 
கைவிட்டு போனதென்ன 
காண பொறுக்கலியே-நீ 
காலொடிஞ்சு போனதென்ன..!

வருஷம் ஆகி போச்சு-உனக்கு 
வயசும் ஆறு ஆச்சி...

இடைப்பட்ட வேளையிலே-உனக்கு 
இரண்டு தம்பி பாப்பாக்களும் உருவாச்சு...

நான் நெனைச்ச 
நெனைப்பெல்லாம் மண்ணாகி போயாச்சே...

தறி பட்டறைக்கும் உன்னை 
தாரை வார்த்து குடுத்தாச்சே...

செல்லமே-என் 
சிங்கார சிரிப்பே...

தம்பி ஒரு கண்னென்றால்
தங்கை ஒரு கண்ணப்பா
தங்கமே நீயும் எனக்கு உயிரப்பா..!

தம்பிக்கு சோறு வேணும் 
பகலெல்லாம் தேய்ந்து விடு...
தங்கைக்கு துணி வேணும் 
இரவுக்கும் சொல்லி விடு..!

பேனாவ புடிச்சிருந்தா
பகலவன் ஆயிருப்ப...
நாடாவ  புடிச்சிகிட்டு 
நாசமா போயிட்டியே..!

புத்தகத்த படிச்சிருந்தா 
பாரெல்லாம் புகழ்ந்திருக்கும் 
ஊத்தி குடிச்சதாலே 
ஊரெல்லாம் இகழ்ந்திருச்சே..!

நான் நெனைச்ச 
நெனைப்புக்கு உனக்கு 
வானங்கூட தல வணங்கும் 
விதி நெனைச்ச நெனப்பிருக்கே-அதில் 
விதை கூட கருகி விடும்..!